சிவகங்கை: காரைக்குடி, சிவகங்கை, திருப்புவணம் கீழடி ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைசெல்வன், சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக தன்னை தேர்வு செய்ய கார்த்தி சிதம்பரம் விடுத்துவரும் கோரிக்கை குறித்த கேள்விக்கு, “அகில இந்திய காங்கிரஸ் தலைமை யாரை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்வோம்” என தெரிவித்தார்.
மேலும் குஜராத், ஹிமாச்சல பிரதேச தேர்தல் குறித்த கேள்விக்கு, “ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது. குஜராத்தில் மோடியின் சொந்த தொகுதி என்பதால் அரசு பலம், அரசியல் பலம், அதானி பலம், அம்பானி பலம் உள்ளிட்ட பல்வேறு பலங்களை கொண்டு வெற்றிபெற்றுள்ளனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக காங்கிரஸ் தலைவர் பிரச்னைக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது உட்கட்சி பிரச்னை. காங்கிரஸ் கட்சியில் எந்த பிரிவும் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இமாச்சல் முதலமைச்சர் தேர்வு - காங். தலைவர் கார்கே சூசகம்!