சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில், தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த பகுதியில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் இரண்டாவது கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
ரூ.11 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகத் திட்டம்
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களான சுடுமண் பானை, பாசிமணி, உறைகிணறு உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்த அரசு முனைப்பு காட்டுகிறது.
தொல்லியல்துறை சார்பில் ரூ. 11 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகத்திற்கான கட்டுமானப்பணி நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமையில், சுற்றுலா பண்பாடு அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் இன்று (ஜூலை 25) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அருங்காட்சியக திட்டம் குறித்த காலத்துக்குள் முடிவுறும்...
ஆய்வுக்குப் பின்னர் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், “கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு பெறும் வகையில் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.
ஆய்வின் போது திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல்பாண்டியன், துணை தாசில்தார் தர்மராஜ், தொல்லியல்துறை கூடுதல் (பொறுப்பு) ஆணையாளர் சிவானந்தம், சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஒரு நிமிடத்தில் 37 கான்கிரீட் கற்கள் உடைத்து சாதனை - மதுரை பொறியாளர் அசத்தல்