சிவகங்கை: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதில், முதலாவதாகச் சிவகங்கை வீரமாகாளியம்மன் கோயில் அருகிலும், பின்னர் ராமச்சந்திரன் பூங்கா அருகிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மேடை பரப்புரை மேற்கொண்டார்.
இதில், வீரமாகாளியம்மன் கோயில் பகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பிக்கப்பட்டதால் ப.சிதம்பரம் பேச்சை 15 நிமிடம் வரை நிறுத்தி அதற்கு மரியாதை செலுத்திய பின்னர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து, ஓடி ஒழிந்திருக்கின்றனர். அதிமுக அரசு இந்த தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அதைதான் அரசியல் சாசனம் சொல்கிறது.
சட்டத்தை மதிக்கிறேன் என வாய் கிழியப் பேசியவர்கள் ஐந்து ஆண்டுகளாகத் தேர்தலை நடத்தாதது ஏன்?. மத்தியிலும், மாநிலத்திலும் மட்டுமே மக்களாட்சி இருந்தால் போதாது. அனைத்து பகுதிகளிலும் மக்களாட்சி இருக்கவேண்டும். அதை தான் அரசியல் சாசனம் சொல்கிறது.
மத்திய அரசு என்றும், மாநில அரசின் விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. உதாரணம் நம்முடைய அரசு, நம்முடைய பணத்தில் மருத்துவக் கல்லூரியைக் கட்டுகிறோம். அதில் நம் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அதில் மத்திய அரசு நீட் என்கிற தேர்வை வைத்துத் தடுக்கிறார்கள்.
அதிமுகவினர் போட்டியிடுகிறார்கள் என நம்புகிறேன். அவர்கள் போட்டியிடுவதை வரவேற்கிறேன் அது ஜனநாயகம். இந்த தேர்தலை ஏன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடத்தவில்லை. இந்த தேர்தலை அவர்கள் ஆட்சியில் நடத்தியிருந்தால் அவர்கள் தோற்றிருப்பார்கள்.
தேர்தலுக்கு முன்பாகவே சொன்னேன் திமுக அரசு அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவார்கள் என்று, அதனைதான் திமுக தற்சமயம் செய்துவருகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
அதிமுக தலைவர்கள் நேற்று கூறியிருக்கிறார்கள், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று, அது எப்படிக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே நாளிலா நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு வாக்குறுதிகளையும் படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். ஐந்து ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்" எனப் பேசினார்.
மேலும், "முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரையிலும் ஒரு தப்பான அடிக்கூட எடுத்து வைக்கவில்லை, தடம் புரளாமல் திமுக அரசு நடைபெற்றுவருகிறது. அது தொடர்ந்து நடக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோன் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'