சிவகங்கை: காரைக்குடி அருகே மாத்தூா் வேல்முருகன் குடியிருப்பை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா(22). இவர், காரைக்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கணிதம் படித்து வந்தாா். இவரும் அதே பகுதியை சோ்ந்த மனோகரன் என்பவர் மகன் கண்ணன்(29) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்கக்கோரி அவரது வீட்டிற்குச்சென்று கண்ணன் பெண் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போா்ட் மற்றும் சான்றிதழ்களைத் தருமாறு கைப்பேசியில் அழைத்துள்ளாா். அதன்படி, சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சினேகா தனது இருசக்கர வாகனத்தில் மாத்தூா் நியாய விலைக் கடை அருகே வந்துள்ளாா்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்புக்கம்பியால் சினோகாவின் தலையில் கண்ணன் தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சினோகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதனையடுத்து அங்கு சென்ற சாக்கோட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனா்.
இதையும் படிங்க: நடிகை ஜெசிக்கா தற்கொலை வழக்கு - காதலன் சிராஜிதீனிடம் 3 மணி நேரம் விசாரணை