இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது பேராலயம் உள்ளிட்ட எட்டு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை, தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டைனி என்கிற மோப்ப நாய் உதவியுடன் பயணிகள் வைத்திருந்த பொருட்கள், குப்பை தொட்டி, இருசக்கர வாகனம் ஆகியவைகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். இதேபோல் திருநெல்வேலி ரயில்நிலையம், தர்மபுரி ரயில் நிலையம் ஆகியவற்றிலும் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.