மக்களவைத் தேர்தல் தொடங்க வெகு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தங்களது தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பல கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், வருகின்ற 12ஆம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார்.
அவர் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். சேலத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மதச்சார்பற்ற கூட்டணி வழுவாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் மிகப்பெரிய வெற்றியினை பெறுவோம்.
மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு எழுதிய துணிக்கடை விளம்பரம் போல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.