சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஜெயராணி. இவரது மகனுக்கு சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியர் சென்னையில் வசித்துவந்தனர். இந்நிலையில், புது மணப்பெண்ணுக்கு திருமணமான ஒரு மாதத்தில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் மருத்துவர்கள் அப்பெண் ஐந்து மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டு கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதனால் மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மணப்பெண்ணிடம் கேட்டபோது, தான் சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்ததாகவும், நர்சிங் கல்லூரியின் உரிமையாளரும், கல்லூரியின் முதல்வருமான சிவகுரு துரைராஜ்(61) தன்னுடைய சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு அதைக் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் உறவுக்கு ஒத்துழைத்தால்தான் சான்றிதழை தருவேன் என்றும் சிவராஜ் கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த விசயத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டியதால்தான் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை எனவும் இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து மாமியார் ஜெயராணி அந்த பெண்ணை சிவகங்கை மகளிர் காவல் நிலையம் அழைத்துவந்து சிவகுரு துரைராஜ் மீது புகாரளித்தார். இதையடுத்து சிவகுரு மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
சிவகுருதுரைராஜ் பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவின் தலைவராக உள்ளார். இவரது தனியார் நர்சிங் கல்லூரியில், இவரால் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் புகார் எழுந்துள்ளது. ஆகவே, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் தைரியாமாக புகாரளிக்கலாம் எனவும், அப்புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் கைதான நேபாள முன்னாள் சபாநாயகர் கைது!