சிவகங்கை: கீழடி அருகேயுள்ள கொந்தகையில் தற்போது தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 4-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது மழைக்காலம் துவங்கவிருப்பதால், அகழாய்வுப் பணிகள் நிறைவை எட்டியுள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு என்பதால், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்து வருகின்றன. பல்வேறு வகையான ஈமச்சடங்குகள் இங்கு நிலவியுள்ளன என்பதையும், அங்கு நடைபெறும் அகழாய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் 4-ஆம் கட்ட அகழாய்வில் கருப்பு, சிவப்பு நிறமுள்ள தாழியொன்றில் 2 சூதுபவள மணிகள் 17.5 செ.மீ மற்றும் 20 செ.மீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இவ்விரண்டு மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ நீளத்திலும், 2.3 செ.மீ விட்டத்திலும் உள்ளது.
இவற்றில் ஒரு மணியில் அலைமுறை மற்றும் வட்டக்கோடுகளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கொந்தகையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்விலும் இதே ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கருப்பு, சிவப்பு நிற முதுமக்கள் தாழியிலிருந்து 74 சூதுபவள மணிகள் வெளிக் கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், “பண்டைய கால மக்கள் அலங்காரத்திற்காக இது போன்ற சூதுபவள மணிகளைப் பயன்படுத்தினர். மேலும், இது போன்ற ஆபரணங்கள் அவர்களது சமூக அந்தஸ்தையும் வெளிக்காட்டியது” என்கின்றனர், தொல்லியல் ஆய்வாளர்கள்.
இதையும் படிங்க: “அதிமுக - பாஜக கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை” - கே.பி.ராமலிங்கம் பேட்டி!