சிவகங்கை: சிவகங்கை அருகே சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 292ஆவது பிறந்தநாள் விழா நேற்று (ஜன.3) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா முழுவதும் அறியப்படாத 75 தலைவர்களை கெளரவப்படுத்தபடுவர். வேலுநாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம். பாரத பிரதமர் சுதந்திர தின எழுச்சி திருவிழாவை நடத்துவதன் நோக்கம் தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காகதான்.
292 ஆண்டாக புகழ் பெற்று விளங்கும் வேலு நாச்சியாரை அடுத்த தலைமுறைக்கு உந்து சக்தியாக கொண்டு செல்ல வேண்டும். வேலுநாச்சியார் பெயரில் ரயில் ஓடுகிறது. பல கோரிக்கைகளை தொடர்ந்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கை கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து, 2021 ஆம் ஆண்டு வரையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு, பாசம், காதல் குறையாமல் இருந்து வருகிறது. ராஜிவ் கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்துகொண்டிருப்பதால் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான முழுமையான காப்பீட்டு தொகையனது வங்கி கணக்குகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரணத் தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ராஜேந்திரபாலாஜி விரைவில் குற்றமற்றவர் என நிரூபிக்கும்வரை காத்திருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கூட்டணி தலைமையின் முடிவே எங்களின் முடிவு - சரணடைந்த துரை வைகோ