சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணியின் தொடக்கமாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வுப் பணிகளிலிருந்து 2014-2015, 2015-2016ஆம் ஆண்டுகளில் மத்தியல் தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற அகழாய்வுப் பணி வரை அதன் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணா.
இந்தக் காலகட்டத்தில் கீழடி அகழாய்வுப் பணிகள் அனைத்தும் உலகளாவிய கவனத்தைப் பெற்றன. அங்கு கிடைத்த அனைத்துப் பொருள்களையும் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தி, கீழடியின் மூலமாகத் தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா. இவரது தலைமையிலான இரண்டாம் கட்ட அகழாய்வின்போதுதான் மிகப்பெரிய அளவில் செங்கல் கட்டுமானங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் காரணமாக ஏறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர்களால் நகர நாகரிகம் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்றாம் கட்ட அகழாய்வின்போது, அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாம் மாநிலத்துக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டார். நீண்ட நெடுங்காலம் நடைபெற வேண்டிய அகழாய்வுப் பணிகளில் முதலில் நியமிக்கப்பட்ட அலுவலரே தொடர்ந்து பணியில் இருப்பார் என்ற விதிமுறையை மாற்றி, இரண்டாண்டுகள் மட்டுமே எனத் திருத்தம் செய்து, அமர்நாத் பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள், மக்களின் தொடர் வலியுறுத்தல்கள் காரணமாக மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்கு ஸ்ரீராமன் என்பவரை கண்காணிப்பாளராக மத்திய தொல்லியல் துறை நியமித்தது.
அதைத் தொடர்ந்து, கீழடியில் ஆய்வு செய்யும் அளவுக்கு எந்தவிதமான தடயங்களும் இல்லை என்று கூறி மூன்றாம் கட்ட ஆய்வோடு மத்திய தொல்லியல்துறை விலகிக் கொண்டது. அதன்பின் நடைபெற்ற போராட்டம் காரணமாக நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டது. தற்போது 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னை மீண்டும் மத்திய தொல்லியல் துறையின் சென்னை சரகத்தில் பணியாற்ற அனுமதி கோரி மத்திய பணியாளர் தீர்ப்பாயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணா முறையிட்டிருந்தார். அதில் சென்னை, கேரள மாநிலம் திரிச்சூர், கோவா என முன்னுரிமை அடிப்படையில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பான பரிந்துரையை மத்திய பணியாளர் தீர்ப்பாயம், மத்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஆண்டே அனுப்பியிருந்த நிலையில், கடந்த 11ஆம் (நவ) தேதி, அமர்நாத் ராமகிருஷ்ணாவை கோவாவுக்கு பணியிடமாறுதல் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.