கரோனா நோய்த் தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆரம்பம் முதல் இதுவரை மொத்தமாக நோய்த் தொற்று 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 என்ற அளவிலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 287 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (மே.21) மட்டும் 224 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவட்டத்தை பொருத்தவரை ஏற்கனவே தனியார் மருத்துவமனையின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அரசு மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனையிலும், வெளிமாவட்ட நோயாளிகளும் வருவதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் காரைக்குடி, திருப்பத்தூர், பொன்னமராவதி போன்ற வட்டார அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை வழங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருந்தபோதும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஓரிரு தினங்களில் சுகாதர நிலையங்களில் கரோனா சிகிச்சைப் பிரிவு செயல்படத் தொடங்கும் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காப்பீட்டு அட்டை வாங்க ஆட்சியர் அலுவலகம் வந்த கரோனா நோயாளி!