சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில், போதைக் கும்பலிடம் சிக்கி, காவல்துறையால் மீட்கப்பட்டு, காவல் பாதுகாப்பில் இருக்கிறார்
இந்நிலையில் தன்னை மீட்கக்கோரி உருக்கமான கடிதம் மற்றும் வீடியோக்களை தனது சகோதரனுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இதையறிந்த அவரது பெற்றோர் தங்களது மகனை மீட்டு தரக்கோரி அரசிற்கு கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
முத்துப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், முத்து தம்பதியர். கண்ணன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரத்குமார் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். பெண்கள் இருவருக்கும் திருமணமாகியுள்ளது.
குடும்ப வறுமையினால் வெளிநாட்டில் வேலை
கடைசி மகனான ஆனந்த் தொழிற்கல்வி முடித்து, ஊரிலேயே கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக, அதே முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் காரைக்குடி கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற ஏஜெண்ட்கள் மூலமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி கோயில் கட்டுமானப் பணிக்கென மலேசிய நாட்டிற்கு சென்றுள்ளார்.
மூன்று மாதம் வரை குடும்ப தொடர்பில் இருந்த ஆனந்த், பின்னர் தொடர்பற்ற நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் விசாரித்ததில் ஆனந்த், போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்டு, காவல் துறையின் பாதுகாப்பில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆனந்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், அவர்கள் காவல் பாதுகாப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலாது எனவும் பதிலளித்துள்ளனர்.
குடும்பத்தினருக்கு கடிதம்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளி நாட்டில் இருந்து திரும்பிய நபர்கள் மூலம் கடிதம் மற்றும் வீடியோ பதிவை ஆனந்த் அனுப்பியுள்ளார்.
அதில் அவரது சகோதரரான சரத் குமாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகுந்த துயரத்தில் உள்ளதாகவும்; தான் உயிரோடு வந்தால் மகிழ்ச்சிகொள் என்றும்; உடலாக வந்தால் பெரும் மகிழ்ச்சி கொள் என்கிற மனதை உலுக்கும் வார்த்தைகளுடனும் கடிதம் எழுதியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பெற்றோர் கண்ணீர் மல்க, தனது மகனை மீட்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:TamilNadu municipal corporation election: மாநகராட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்