ராமநாதபுரம்: தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்துவதாக தேவிபட்டினம் கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் அய்யனார், தனி பிரிவு காவலர் இளையராஜா, முதுநிலை காவலர்கள் சரவணபாண்டி, முருகானந்தம், கோபு மற்றும் தலைமை காவலர்கள் ரமேஷ் குமார், செந்தில்குமார் ஆகியோர் தேவிபட்டினம் வடக்கு கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகமான முறையில் ஒருவர் நிற்பதை கவனித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் தேவிபட்டினம் இபுராகிம்சேட் நகரை சேர்ந்த முகம்மது அலி என்பவரது மகன் முகம்மது அலி ஜின்னா(43) என தெரிய வந்தது.
மேலும் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட பச்சை கடல் அட்டைகள் ஏழு சாக்கு பைகளிலும் மூன்று பிளாஸ்டிக் கேன்களிலும் சுமார் 400 கிலோவிற்கு மேல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடற்கரை காவல்நிலைய காவல்துறையினர், முகம்மது அலி ஜின்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தில் மாதுளை பழ பெட்டிகளில் வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள்... போலீஸ் விசாரணை