சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் புகழ்பெற்ற கற்பகவிநாயர் (Pillayarpatti Karpaga Ganesha Temple) ஆலயத்தில் 2023ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று (ஜன.1) அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4:00 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்திலும் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனர். தமிழர்களின் முழுமுதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானைக் காண, தமிழகம் முழுவதும் மட்டுமன்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், உணவு, மருத்துவ வசதி செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியில் இருந்தும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பிள்ளையார்பட்டிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் கரோனா ஒழிந்து மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அமைய வேண்டும் என பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்