சேலம்: சேலம் அருகே வாய் பேச முடியாத மகனின் நிலையைக் கண்டு மனமுடைந்த இளைஞர் தனது தந்தை மகன் மனைவி என மூன்று பேரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது சேலத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தம் (56). இவர்களது இரண்டாவது மகன் திலக்(40). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மகேஸ்வரி (38) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கரோனா காலத்திற்கு பின் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் திலக், வாய் பேச முடியாத தனது 6 வயது மகன் சாய் கிரிசாந்த்தை நினைத்து மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திலக் தனது வீட்டில் இருந்த தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் ஆகிய 4 பேருக்கும் உணவில் விஷம் வைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் திலக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திலக்கின் தாய் வசந்தம் மயக்க நிலையில் இன்று காலை வீட்டின் கதவை திறந்து அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது, வீட்டில் சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் சாய் கிரிசாந்த் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து உடனடியாக கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை தடயவியல் துறையினர் மூலம் சோதனை செய்தனர். மேலும் அப்பகுதியிலுள்ள பொது மக்கள் இடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்து கிடந்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின் படி தனது மகனின் நிலை கண்டு மன அழுத்ததில் இருந்த திலக் தனது தந்தை சிவராமன், தாய் வசந்தம், மனைவி மகேஸ்வரி, மகன் சாய் கிரிசாந்த் ஆகியோர் உணவில் விஷம் வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனத் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மிசோரம் ரயில்வே பாலம் விபத்து; 17 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!