சேலத்தில் 44ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை சேலம் ஆட்சியர் ரோகினி மற்றும் தோட்டக் கலைத்துறை இயக்குனர் சுப்பையன் தொடங்கி வைத்தார். ஏற்காடு கோடை விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. விழா நடைபெறும் 3 நாட்களுக்கு, ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவையொட்டி விழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நினைவுபடுத்தும் மலர் சிற்பம் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் பூக்களால் உருவாக்கப்பட்ட சிற்பம் மற்றும் இந்திய வரலாற்று சின்னங்களை நினைவூட்டும் மலர் சிற்பங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இரண்டரை லட்சம் வண்ண ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, சாமந்தி போன்ற மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் சென்னை, கேப்டன் அமெரிக்கா, இந்திய விமானி அபிநந்தன் உருவத்துடன் கூடிய போர் விமானம், மரங்களை வளர்ப்போம், இயற்கையைக் காப்போம் என்பதை உணர்த்தும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட உலக உருண்டை போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மா பலா வாழை, அன்னாசி, பப்பாளி, எலுமிச்சை முதலான பழங்கள் மற்றும் வித விதமான காய்கறிகளை கொண்டு அலங்கார வளைவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர்.