தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஆண்டுதோறும் கோடைவிழாவும் மலர்க் காட்சியும் நடத்தப்படுவது வழக்கம்.
சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள இப்பகுதியில், 1976ஆம் ஆண்டு முதல் கோடை விழாவும், மலர் கண்காட்சியும் நடைபெற்றுவருகிறது . அந்த வகையில் இந்த ஆண்டில் 44ஆவது கோடை விழா, மலர் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலைத் துறையும் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
மக்களவைத் தேர்தல் காரணமாக மே முதல் வாரத்தில் நடைபெறவிருந்த கோடை விழா மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் காட்சிக்குத் தேவையான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் சுமார் நான்காயிரம் கார்னேஷன் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பூந்தொட்டிகளில் பால்சம், ஜுனியா, டேலியா, பிளாக்ஸ், கேலண்டுலா, சாமந்தி, செவ்வந்தி, ஜெரேனியம், சால்வியா உள்ளிட்ட 20 வகையான வண்ண மலர்ச்செடிகளும் நடவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
விதவிதமான வண்ண மலர்களால் நடத்தப்படும் மலர்க்காட்சிக்காக அண்ணா பூங்காவில் மலர் படுகைகள், புல்வெளிகள், அலங்கார வளைவுகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு அவற்றை மேலும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரோஜா தோட்டம், ஏரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் விதவிதமான மலர் படுகைகள் அமைக்கப்பட்டு, அங்கும் மலர்ச் செடிகள் நடவு செய்து வளர்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் பெய்த கோடை மழை காரணமாக ஏற்காட்டில் குளுகுளு சீதோஷன நிலை நிலவுகிறது. பார்க்குமிடமெல்லாம் பசுமையாக மாறியுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோடை விழாவின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் படகுப் போட்டிகள், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.