உலக சுற்றுலா வார விழாவை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் வரும் 27ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை தூய்மைப்படுத்துவது பாரம்பரிய நினைவு சின்னங்களை சுற்றுலா குழுவினருடன் பார்வையிடுவது, கலாசார நடன நிகழ்ச்சிகள் நடத்துவது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்று மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அன்னை இல்லத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவியர் சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைத்து அவர்களை ஆட்சியர் உபசரித்தார். அங்கு வட கிழக்கு மாநிலத்தவர்களின் நடனம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனைக் கண்ட மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் சேலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ”மேட்டூர் அணையை இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாநில அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உள்ளிட்ட சுற்றுலா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.