சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மூக்கனேரியில் பெண் சடலம் ஒன்று மிதந்தது. இதனைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் கன்னங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டனர்.
இதனை அடுத்து, காவல் துறையினர் சடலத்தை உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14125145_th.jpg)
இந்தச் சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், "அந்தப் பெண் கன்னங்குறிச்சி சத்யா நகரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், ஒரு மகன் உள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பிரிந்து செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கவுசல்யா வசித்துவந்துள்ளார்" என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வீட்டுவேலை செய்துவந்த அவர் கடந்த 4ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது தந்தை செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14125145_th.jpg)
கவுசல்யா சம்பவத்தன்று இரவு அவரது தாயின் செல்போன் எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு உருக்கமாகப் பேசி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கவுசல்யா பேசும்போது, "அம்மா என்னை மன்னித்துவிடு, எனக்கு உடலில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை உங்களிடம் சொல்ல முடியவில்லை. நான் உங்களுக்குத் தொந்தரவாகவும் இருக்க முடியாது.
என்னால் நீங்கள் கஷ்டப்பட்டது போதும், இனிமேல் கஷ்டப்பட வேண்டாம். அதனால் தான் இந்த முடிவை எடுக்கிறேன். வேறு யாரும் இதற்குக் காரணம் இல்லை. என்னை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், சந்தோஷமாக இருங்கள். அப்பாவை நன்றாகப் பார்த்துக்கொள். எனக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று பேசி உள்ளார்.
தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: Jewelry Robbery: கரூரில் மிளகாய்ப் பொடி தூவி 6 சவரன் நகை கொள்ளை