சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள குகை புலிகுத்தி தெருவில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதுபானம் வாங்கும் சிலர் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துவதால், அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை என்று காவல் துறையினருக்கு தொடர்ச்சியாக புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், அந்த மதுக்கடையில் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு வைக்க, வாகனம் மூலமாக மதுபாட்டில்கள் இறக்கப்பட்டு வந்தன. இதையறிந்த, அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுக்கடைக்குள் மதுபானங்களை இறக்கி வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து லாரியை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்கள் டாஸ்மாக் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த மதுக்கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு அங்கிருந்துச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் 1 ஏக்கருக்கு கஞ்சா செடி... தீயில் இரையாக்கிய வனத்துறை!