சேலம், மன்னார் பாளையம் பிரிவு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த மோகனேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு கோவையில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஷிபு என்னும் மூன்று வயது மகன் உள்ளார்.
கோபி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்ததால், மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலத்திலுள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். கோபி பலமுறை அழைத்தும் மோகனேஸ்வரி அவருடன் செல்ல மறுத்துள்ளார்.
இந்நிலையில், மோகனேஸ்வரி கடந்த 10ஆம் தேதி இரவு அல்லிக்குட்டை, கங்கா புதூர் அருகே முட்புதருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
விசாரணையில் கணவர் கோபி மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் கோபி தலைமறைவாக இருந்ததால் காவல் துறையினர் அவரை தேடிவந்தனர். இதையடுத்து கோபி கோவை நீதிமன்றத்தில் தானாக சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து வீராணம் காவல் துறையினர் விசாரிக்கையில், கோபி தனது நண்பர்களான விஜி, காளியப்பன், வீராங்கன், மோகன் ஆகியோர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கைதான கோபியின் நண்பர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை!