சேலம்: ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மகள் கோகிலவாணி (20) தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சென்னகேசவன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
பின்னர் 18 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துவிட்டு அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்தனர். அவ்வப்போது மனைவியைப் பார்ப்பதற்கு அடிக்கடி சேலம் சென்றுவிட்டு, சந்தித்து பழகுவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார்.
இந்நிலையில், நாளடைவில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் சரிவரப் பேசாமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கணவர் பெங்களூருவிலிருந்து சேலம் வருவதையும் கோகிலவாணி தவிர்க்க வலியுறுத்தி வந்துள்ளார்.
கொலைக்கான காரணம்: இதனால் சந்தேகம் அடைந்த கணவர், மனைவியை கண்காணித்தபோது பல்வேறு ஆண் நண்பர்களுடன் அவர் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று முரளி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கொடி கம்பம் அவமதிப்பு! மது பாட்டிலில் சிறுநீர் கலந்து ஏற்றிய கொடூரம்! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப். 23) சேலம் வந்த முரளி, தமக்குள் ஏற்பட்டுள்ள மனக்கசப்பை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கோகிலவாணியிடம் கூறி காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி வனப்பகுதியில் உள்ள கோயில் அருகே வரவைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில் முரளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு கோகிலவாணியை குத்தி கொலை செய்தார். மேலும் மனைவியை அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
காவல்துறையிடம் சரண்: இந்நிலையில் டேனிஷ்பேட்டை வனத்துறையினர் அளித்த புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீவட்டிப்பட்டி காவல் துறையினர் மற்றும் டிஎஸ்பி சங்கீதா ஆகியோர் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முரளி கிருஷ்ணன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், காவல் துறை விசாரணையில் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மழையால் மண் சுவர் இடிந்து கோர விபத்து! பெண் பரிதாப பலி!