வரும் 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்து மக்கள் கட்சி முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து சேலத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், ரஜினிகாந்த் கூறிய ஆன்மீக அரசியலை முன்வைத்து 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி பரப்புரை செய்யும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் கூறிய ஆன்மீக அரசியல் என்று வருகிறதோ? அன்று தான் தீண்டாமை கொடுமை இருக்காது என்று தெரிவித்த அவர், திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டில் தீண்டாமை இன்னமும் இருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
தெற்கு திட்டை ஊராட்சித் தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் இன்னமும் தீண்டாமை இருக்கிறது என்பதற்கு சாட்சி. அதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது அவர்கள் மீது பிசிஆர் சட்டத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அர்ஜுன் சம்பத், தீண்டாமை அதிமுக, திமுக தலைவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது.
தீண்டாமையே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி செயல்படுகிறது. அதிமுகவைப் பிளவு படுத்திவிடலாம் என்ற ஸ்டாலின் கனவு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் கலைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது. முதலமைச்சருக்கு நாங்கள் நேரில் நேற்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒடுக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்