சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சாலை ஓரங்களில் தள்ளுவண்டிகளில் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளை வியாபாரம் செய்து சிலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வாழைப்பழ வியாபாரிகளிடம் காவல்துறை லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ தற்போது வாட்ஸ்அப் குழு உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், காவல்துறை வாகனத்திற்கு அருகே பழ வியாபாரி நின்றபடி பேசுகிறார். நடுவில் தனது சட்டை பாக்கெட்டில் கைகளை விட்டு துழாவுகிறார். பின்னர் காவல்துறையினரின் வாகனம் அறிவிப்புகளை ஒலித்தபடி நகருகிறது. இதனை வீடியோவாகப் பதிவு செய்யும் நபர் வியாபாரியை தன் அருகே அழைத்து, ‘எவ்வளவு கொடுத்தீர்கள், இப்படி கொடுத்தால் எப்படி பிழைப்பீர்கள்’ என வினவுகிறார்.
அதற்கு அந்த வியாபாரி இதற்கு முன்பாக வந்த காவலர் 200 ரூபாய் வாங்கி சென்றதாகவும், தற்போது மேலும் ஒரு காவலர் 200 ரூபாய் வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ காரிலிருக்கும் ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர். மேலும், அந்த பழ வியாபாரி மாநகராட்சி சார்பில் வழங்கிய ரசீதைத்தான் எடுத்து கொடுத்ததாகவும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். கரோனா காலத்தில் கூட சாலையோர வியாபாரிகளிடம் காவலர்கள் லஞ்சம் பெறுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை அனுமதித்த காவலர் பணியிடை நீக்கம்