சேலம்: மாநகரப் பகுதிகளில் அதிக அளவில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சில கால்நடைகள் சாலைகளில் உறங்குகின்றன.
இதனால், அதிகளவில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன. இந்த நிலையில் இன்று (நவ.27) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையின் நடுவே நின்று இடையூறு ஏற்படுத்தின.
இதனால் அவ்வழியே செல்லும் பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்லமுடியாமல் சாலைகளில் நின்றன. இந்நிலையில் அவ்வழியே சென்ற சேலம் டவுன் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி உடனடியாக குச்சி எடுத்து மாடுகளை ஓட்டிச் சென்றார். காவலர் உடையில் உதவி ஆய்வாளர் மாடுகளை ஓட்டிச் சென்றதை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
காவலரின் இந்தச் செயலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனங்கள் விரைந்து சென்றன. காவலரின் இந்தச் செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்