சேலம்: அரசு அலுவலர்கள் வீடுகளில் சோதனை செய்தால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்து விடலாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசினார்.
சேலத்தில் இன்று (ஜன.10) சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்கத்தின் 9ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .அந்த வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அதன் அடிப்படையில் வரும் இரண்டு மாதத்திற்குள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்க மத்திய அரசு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் ஜிஎஸ்டி குளறுபடிகள் தீரும் என்று எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டில் உணவுத்துறை அலுவலர்கள் சிறுசிறு கடை வைத்திருக்கும் வணிகர்களை முழுமையாக சுரண்டி அவர்களை நசுக்கி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள்.எந்த கடை வைத்தாலும் அதற்கு உரிமம் பெறுவதற்கு என்று தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.
அரசு அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்தி சட்டத்திற்குப் புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தால்,நாட்டின் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.