சேலம்: சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.2.53 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சூரமங்கலம் சார்பதிவாளர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சார்பதிவாளர் கனகராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாகக் கூறி ஓமலூர் கொங்குப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அம்மாசி என்பவர் அணுகியுள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு துறையில் தனக்கு தெரிந்த அலுவலர்கள் மூலம் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய ரூ.2.35 லட்சம் தருமாறு கனகராஜை வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து கனகராஜ், லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் செய்தார்.
புகாரைப் பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், இன்று அழகாபுரம் பகுதியில் சார்பதிவாளர் கனகராஜிடம் ரூ.2.35 லட்சம் பணத்தைப் பெறும்போது அம்மாசியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைதான அம்மாசி மீது கொங்குப்பட்டி ஊராட்சியில் பல்வேறு முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய மின் இணைப்புக்கு கையூட்டு பெற்ற உதவிப் பொறியாளர் கைது!