கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகளை வாங்க பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க மாவட்டந்தோறும் நடமாடும் காய்கறிக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 354 வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சேலம் ஆனந்தா பாலம் ஆற்றங்கரையோரப்பகுதியில் வியாபாரிகள் சிலர் தடையை மீறி, கடைகள் அமைத்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர்.
அந்தக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதால், காவல் துறையினர் உடனடியாக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். ஒரு சில வியாபாரிகள் காவல் துறையினரைக் கண்டதும் அவசர அவசரமாக கடைகளைத் தாங்களே அகற்றினர்.
மேலும், அதிகளவில் கூட்டம் நிறைந்து காணப்பட்ட வியாபாரிகள் 4 பேருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தடையை மீறி, இனி காய்கறிக் கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தனர்.