முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதற்காக, எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டை பறித்து வங்கி அலுவலர்கள் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இட ஒதுக்கீடு மோசடியை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 16) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் நாவரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, இடஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு பறித்ததை கண்டித்தும், அரசியலமைப்புச் சட்டப்படி பட்டியல் வகுப்பினருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆர்ப்பாட்டம் குறித்து பேசிய விசிக மண்டல செயலாளர் நாவரசு, “எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தற்போது பறித்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மருத்துவ மேற்படிப்பு படிக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும்.
அது போல நடந்து முடிந்த வங்கி தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படியே வங்கி தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் விரைவில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'தமிழ்நாட்டுடன் புதுச்சேரியை இணைக்கும் திட்டம் இல்லை' - ரவி