ஓமலூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று (ஜன.25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் கட்டட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் தலைவர் அழகாபுரம் சம்பு தலைமையில், ஸ்ரீ பொன்னு மாரியம்மன் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், பொது நலச்சங்க செயலாளர் வித்யா, தமிழின கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், முத்தமிழ் அமைப்புசாரா மற்றும் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் பாபு மற்றும் அதன் உறுப்பினர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு இபிஎஸ், கட்சியின் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அமைப்புசாரா நல வாரிய நிர்வாகிகளான சம்பு மற்றும் வித்யா ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “சேலத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து வகையான உதவிகளும் வாரியம் மூலம் கிடைத்தது. 5 ஆண்டுகளில் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், திமுக ஆட்சியில் உதவித்தொகைகள் கிடைக்கவில்லை. மேலும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 7,000 கேட்பு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், வாரியத் தலைவர் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். 20 மாத ஆட்சியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு கூட உதவித் திட்டங்கள் வழங்கப்படவில்லை.
பெண்களுக்கான தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை திட்டங்கள் கிடைக்கப்படவில்லை. எங்களது கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்தில் 3 முறை குரல் கொடுத்தவர், எடப்பாடி பழனிசாமிதான். அடுத்து பாராளுமன்ற தேர்தல் வந்தாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்காக நாங்கள் செயல்படுவோம்” என்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடியை துப்பாக்கியால் சுட்டிருப்பார் - அமைச்சர் கீதா ஜீவன்