சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சூரமங்கலத்தை அடுத்த ரெட்டிப்பட்டியில் வசித்துவந்தவர் மணி. 55 வயதான இவர் பால் வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு கண்மணி (45) என்ற மனைவி இருந்தார்.
மணி தனது பால் தொழிலுக்காக, தெரிந்தவர்களிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். ஆனால், மணி தான் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவந்தார். இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் தினமும் மணியின் இல்லம் சென்று பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதுபோன்று, நேற்று மாலையும் மணியின் வீட்டிற்கு வந்த சிலர் பணம் கேட்டு மிரட்டியதாத் தெரிகிறது. இதில், மனம் உடைந்த மணி இன்று அதிகாலை அவரது மனைவி கண்மணியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெகுநேரமாகியும் மணி வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை கவனித்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது கணவன்-மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மணி தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்த உறவினர்கள் அவர்கள் வீட்டின் முன்பாக திரளாகத் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. "கந்துவட்டி கொடுமையால் மணியும், அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர். காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்" என உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து காவல் துறையினர், கந்துவட்டி கொடுமை குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி!