சேலம் அன்னதானப்பட்டி அருகே கரியபெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(32). இவரது மனைவி சத்யா(30). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால், கடைசி பெண் குழந்தையை விற்றுவிடலாம் என்று விஜய் அவரது மனைவி சத்யாவை வற்புறுத்தி வந்தார். ஆனால், இதற்கு சத்யா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், விஜய் தன் மனைவிக்கு தெரியாமல் பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மனைவி நிஷாவிற்கு விற்றுவிட்டார். இதையறிந்த சத்யா, கணவனுடன் தகராறு செய்துள்ளார். மேலும், அருகில் வசிப்பவர்களிடம் குழந்தையை மீட்க உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார்.
சத்யா கூறியதைக் கேட்டு அதிர்ந்த அக்கம் பக்கத்தினர், பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து சேலம் சைல்டு லைன் அமைப்பில் புகார் செய்தனர். இதனடிப்படையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தை விற்பனை குறித்து விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
அன்னதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் முரளி ஆகியோர் கொண்ட தனிப்படையினர், கரியபெருமாள் கரடு பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, விஜய் கரிய பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரின் உதவியுடன் தனது குழந்தையை நிஷாவிடம் விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் கோமதி, நிஷா ஆகியோரிடம் இன்று (டிசம்பர் 12) விசாரணை நடத்தினர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள விஜயை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு - 9.17 லட்சம் ரூபாய் பறிமுதல்