சேலம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்-சத்யா தம்பதியினர், பெங்களூருவிலிருந்து தாராபுரம் நோக்கி இன்று (ஆக 14) அதிகாலை காரில் வந்துள்ளனர்.
கார் சேலம் நான்கு வழி சாலையில் வரும்போது, கந்தம்பட்டி புறவழிச்சாலையில், காரின் முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது.
இதனைக் கண்ட ராஜேந்திரன் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். அப்போது காருக்கு பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும், சரக்கு லாரியும் நிலை தடுமாறி ஒன்றன் மீது ஒன்று மோதின.
இதில் முன்னால் நின்றுக்கொண்டிருந்த கார் அழுத்தம் தாங்காமல் அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணித்தவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று காரில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர். இதையடுத்து சிறு காயங்களுடன் தப்பிய ராஜேந்திரன், சத்யாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: லாரி மீது கார் மோதி விபத்து - கை குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு