சேலத்தில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவோர் மத்தியில், கடந்த இரண்டு நாள்களாக, இரு பிரிவினர் குறித்த டிக்டாக் காணொலி ஒன்று வேகமாகப் பரவி வந்தது. இந்த காணொலி குறித்து பலரும் டிக் டாக் செயலியில், தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், காணொலி பதிவிட்ட நபர்கள் தொடர்பாக, சேலம் சூரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், 'சேலம் மாவட்டத்தை அடுத்த சோளம்பள்ளம் மற்றும் அரியாகவுண்டனூர் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சமுதாயப் பிரிவு மக்களைப்பற்றி கேலி செய்து, வன்முறையைத் தூண்டும் வகையில் டிக் டாக் காணொலியை வெளியிட்டுள்ளனர்.
அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சூழல் நிலவிவருவதால், அந்த இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் புகார் தொடர்பான காணொலியையும் காவல் துறையினரிடம் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட தமிழ்ச்செல்வன் (22), ஞானப்பிரகாசம்(22) என்ற இரு இளைஞர்களை கைதுசெய்தனர். வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட காணொலியைப் பகிர்ந்த சிலரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.