சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைமைச்சருமான பழனிசாமி கொங்கணாபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர்,"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு விதமாகவும் தமிழ்நாடு வந்தால் ஒரு விதமாகவும் பேசுகிறார். கர்நாடகத்தில் பேசும்போது ராகுல் காந்தி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணையை காட்டுவோம் என்கிறார். இங்கு பேசும்போது வேறு விதமாக பேசுகிறார்.
அவர் ஏன் இரண்டு நிலை எடுக்கிறார்? தமிழகத்தின் மீது அவருக்கு அவ்வளவுதான் அக்கறை. மேகதாது அணை கட்டினால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேட்டூர் அணையை நம்பி வாழும் நமக்கெல்லாம் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதுதான் தமிழகத்தின் மீது ராகுல் காந்திக்கு இருக்கும் அக்கறை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் திமுக செய்தது என்ன ? காவிரி தண்ணீர் பிரச்னையில் சிக்கலைத் தீர்த்து வைத்தது அதிமுக அரசு.
இதையெல்லாம் அவர்கள் மறைக்கிறார்கள். தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கிடைக்கவும் காவிரி நீரை நம்பி வாழும் தமிழ்நாடு விவசாயிகள் சிறப்பாக விவசாயம் செய்யவும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் இணைந்து இணக்கமாக செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். அதனால் நாம் இப்போது மத்திய அரசோடு இணக்கமாக இருந்து பல திட்டங்களை பெற்று நிறைவேற்றி வருகிறோம். இது மேலும் தொடர வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.
எனக்கும் பிரதமருக்கும் கட்டியிருப்பதாக ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுகிறார். நான் கேட்கிறேன் ஸ்டாலின் எதற்கு அடிக்கடி லண்டன் போகிறார்? அவருக்கு என்ன பிரச்னை? அவரைப் போல என்னால் பேச முடியாது. தங்களது குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது திமுக அரசு” என்றார்.