சேலத்தில் இன்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், " தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் நடந்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு கட்சி வேட்பாளருக்கும், அவர் சார்ந்த கட்சியின் சின்னத்தை வழங்காமல் தனித்தனி சின்னத்தை வழங்க வேண்டும். அப்போதுதான் கட்சி பாகுபாடு இல்லாமல் வாக்காளர்கள் தங்களுக்கேற்ற மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்களின் உணவான கள் தமிழ்நாட்டிலே தடைசெய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். அடுத்தாண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவுள்ளோம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல இது மாநிலம் தழுவிய அளவில் மிகப் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. அதில் நாங்கள் வெற்றியும் பெறுவோம்.
தென்மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதுபோல உலகப் பொதுமறை எழுதிய திருவள்ளுவரின் சிலையையும் கம்பி வலைக்குள் அடைத்து விடக்கூடாது. திருவள்ளுவரின் சிலையை சேதப்படுத்தி அரசியல் செய்வதை விட்டுவிட்டு அவர் எழுதிய திருக்குறள் நூலை அனைவரும் படிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சரின் ஊரில் அவமரியாதைக்குள்ளான திருவள்ளுவர் சிலை!