சேலம்: ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கிராம மக்கள் உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சவ வேடிக்கை என்றால் ஒரு மனிதன் இறந்தது முதல் செய்யப்படும் சடங்குகளில் தொடங்கி, உயிரற்ற உடல் இடுகாடு கொண்டு சென்று அங்கு நடைபெறும் இறுதி சடங்குகள் வரை அனைத்து நிகழ்வுகளும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று இந்த சவ வேடிக்கைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, சவ வேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்த நபர், திடீரென இறந்துவிட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி பகுதியில் சவவேடிக்கைத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், புதிய நபரை தேர்ந்தெடுத்து நேற்று மீண்டும் கோலாகலமாக சவ வேடிக்கை விழா நடைபெற்றது. சேலம் கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். தான் நலம் பெற்றால், உயிருடன் இருக்கும் போதே தனக்கு இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக மனமுருக வேண்டிக் கொண்டுள்ளார்.
அந்த நபர் தற்போது உடல்நலம் குணமடைந்து பூரணநலம் பெற்ற நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக சவ வேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆண்டு ஏழாவது ஆண்டாக சவ வேடிக்கை ஊர்வலத்தில் பிணமாக வேடம் அணிந்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார். சவ வேடிக்கை வேண்டுதல் முதலில் ஒரு மனிதன் இறந்தவுடன் செய்யும் சடங்குகளுடன் துவங்குகிறது, பாடை கட்டி, தேர் கட்டி, கோயிலில் வழிபாடு நடத்திய உடன் வீதி வீதியாக இறுதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.
பின்னர் இடுகாட்டிற்கு அழைத்துச் சென்று கோழிகளை பலியிட்டு பின்னர் கோழியை புதைத்து விடுவார்கள். இறந்தவராக இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் ஜெயமணி இடுக்காட்டிலிருந்து வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வை அந்த கிராம மக்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஜெயமணி என்பவரின் வேண்டுதலின் பேரில், உயிரோடு இருக்கும் அவர் இறந்தது போல பாவித்து, சடங்குகள் செய்து பாடையில் வைத்து தேரில் ஊர்வலமாக வீதிவலம் வந்தது பலர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.