சேலம்: சேலத்தின் நாம மலை அடிவாரம் பேருந்து நிறுத்தத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரிடமிருந்த செல்ஃபோனை பறிக்க முயன்றனர்.
இருப்பினும் எதிர்பாராதவிதமாக செல்ஃபோன் கீழே தரையில் விழுந்ததால், இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை அப்போது அருகிலிருந்த மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை கவனித்துள்ளார்.
ரூ. 10 ஆயிரம், கத்தி உள்ளிட்டவை பறிமுதல்
இதனையடுத்து உடனடியாக கொள்ளையர்கள் இருவரையும் தனது ஆட்டோவில் துரத்திச் சென்று, அவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார் தங்கதுரை. இதில் நிலைகுலைந்த ஒரு கொள்ளையனை தங்கதுரை பிடித்துக்கொள்ள, மற்றொருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட இரு கொள்ளையர்களும் பொதுமக்களால் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த அகமதுபாட்ஷா, பக்தவச்சலம் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் அளவுக்கு சில்லரைக் காசுகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரையின் வீர செயலை காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை