வெற்றிக்கொடிகட்டு, பகவதி, திருப்பாச்சி, திருப்பதி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பெஞ்சமின். இவர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல்சிகிச்சைக்காக பெங்களூரு சென்றிருந்த அவர், பண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ள அவரை சேலத்தில் சந்தித்து ஈடிவி பாரத் சார்பாக பேட்டி எடுத்தோம்.
அவர் கூறுகையில்," யாருக்கும் ஏற்படக்கூடாத ஒரு சூழல் எனக்கு வந்தது. மிகக் குறுகிய காலத்தில் நான் உதவி கேட்டதும் எனக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவினார்கள். இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்று பல நண்பர்களின் உதவியால் இன்று மாரடைப்பு நோயிலிருந்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வந்திருக்கிறேன்.
பெங்களூருவில் மருத்துவர்கள் நாங்கள் உங்கள் ரசிகர்கள் என்று கூறி எனக்கு உதவியது சினிமா கொடுத்த வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். நான் பெரியதாக சம்பாதிக்கவில்லை. விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறேன். தினமும் படப்பிடிப்பு இருந்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். தொடர்ச்சியாக படப்பிடிப்புகள் இருக்கும் வகையில் வரும் காலம் அமையவேண்டும்.
தற்போது மூன்று படங்களில் நடிப்பதற்கு புக் ஆகி இருக்கிறேன். தொடர்ச்சியாக இந்த கரோனா காலத்திலும் படப்பிடிப்புகள் நடத்திட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நடிகர்கள் முன் வரவேண்டும். எங்களைப் போன்று ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு மாற்று ஏற்பட வேண்டும்" என்று உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் நம்மிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'கூழாங்கல்' டிரைலர் வெளியீடு!