கரோனோ நோய்த் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்துவருகிறது. தடை உத்தரவு நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை கடந்த 30 நாள்களாக தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சேலத்தில் உள்ள பால் மார்க்கெட், செவ்வாய்ப்பேட்டை, குகை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளில் இருந்து இன்று மது பாட்டில்கள் லாரிகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இது குறித்து சேலம் சந்தியூர் பகுதியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளரிடம் கேட்டபோது, "144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்த நாள் முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, சேலத்தில் உள்ள மதுபானக் கடைகளில் இருந்து அனைத்து மது பாட்டில்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுபான விற்பனை நடைபெறாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... கள்ளக்குறிச்சியில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு