தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோன்று ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது.
அந்த வகையில், அதிமுக தேர்தல் பரப்புரையை நாளை (டிச.19) சேலத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளேன்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை திறந்து வைக்கிறேன். மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த அனைத்துக் கட்சியுடன் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனிடையே, தேர்தல் பரப்புரை வாகனம் சேலம் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நாடோடிப் பெண்களுக்கு இருக்கும் அக்கறை, படித்தவர்களுக்கு இல்லை' - ராதாகிருஷ்ணன்