சேலம்-பெங்களூரு, சேலம்-மேட்டூர் ஆகிய ரயில்வே வழித்தடங்கள் அருகே 7 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று அவசரத் தேவைக்குச் சென்றுவருவதற்காக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஏழு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சுரங்கப்பாதை அண்மையில் பெய்த மழையால் முழுவதும் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்கப் பாதைகளைச் சீரமைத்து, சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைத்துத் தர வேண்டும் என்று கோரி, சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு வழங்கினர் .
அதனைத் தொடர்ந்து பாஜக ஓமலூர் தெற்கு ஒன்றிய தலைவர் பாஸ்கர் கூறுகையில், “சேலம் ரயில்வே சந்திப்பிலிருந்து ஓமலூர் செல்லும் ரயில் பாதையில் ஏழு சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன. இந்தச் சுரங்கப்பாதை வழியாக விவசாயிகள் விளைவிக்கும் பூ, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசெல்வது வழக்கம்.
தற்போது சுரங்கப்பாதை மழைநீரால் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் விளைவிக்கும் பொருள்கள் விலை நிலங்களிலேயே வீணாகின்றன. ரயில்வே நிர்வாகம் சுரங்கப் பாதையை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.