சேலம் அம்மாபேட்டையை அடுத்த நாம மலை அடிவாரம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ராஜ்குமார் (19), அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நீச்சல் பழக தனது தாத்தாவுடன் ராஜ்குமார் நேற்று (ஆகஸ்ட் 15) சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் பாதுகாப்புக்காக கட்டியிருந்த பிளாஸ்டிக் கேன் உடைந்ததால் ராஜ்குமார் நீரில் மூழ்கி கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினர், 18 மணி நேரம் போராடி, ராஜ்குமாரை சடலமாக மீட்டனர். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ராஜ்குமாரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் மரணம் குறித்து சேலம் அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.