சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டும் ஓட்டு கேட்க இங்கு வரவில்லை. எனக்கும் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு 10ஆண்டுகள் பின்னோக்கி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பாஜகவுக்கு அடிபணிந்து கிடக்கிற ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை கொண்டு சென்றுவிட்டார்" என்றார்.
தொடர்ந்து, "தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, சுயமரியாதை, உரிமையை மீட்பதற்கான தேர்தல் பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் மக்களை பற்றி கவலை இல்லை; கமிஷன் ஒன்றே அவர்களின் நோக்கம். தமிழ்நாட்டிற்கான உரிமையை மத்திய அரசு மறுக்கிறது. கேட்கப்பட்ட நிதியே கிடைக்காத போது கூட்டணி எதற்கு? மத்திய அரசுடன் இணக்கமான உறவு என வடிகட்டிய பொய்யை பழனிசாமி சொல்லி வருகிறார்" என்று தெரிவித்தார்.
மேலும் மேடையில் பேசிய அவர், "தமிழ்நாட்டு மக்கள் மீது ரசாயன தாக்குதலையும் கலாசார தாக்குதலையும் மத்திய அரசு நடத்தி கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல்களை தடுக்க அதிமுகவால் முடியாது என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் பாஜக கூறியபடியே நடக்கிறது. கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய ஆறு அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்காலாமா?
இந்தியளவில் 37 விழுக்காடு வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள 63 விழுக்காடு வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு பிரிந்துவிட்டன. தமிழ்நாட்டில் அமைந்தது போல. மற்ற மாநிலங்களில் கூட்டணி அமையாத காரணத்தால் பாஜக ஆட்சிக்கு வந்தது. சகோதாரர் ராகுலுக்கு வேண்டுகோள். இந்திய அளவில் ஒரு பலமான கூட்டணி அமைக்க முயற்சிக்க வேண்டும்" என்றார்.