சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன்(75). இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் ரமேஷ் (50), ஜெகதீஷ் (45) என்ற இரண்டு மகன்களும் மஞ்சுளா (40), செல்வி (37) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சாமி பக்தி கொண்ட ரங்கன் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியில் பெருமாள் கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
இந்நிலையில், 25 சென்ட் நிலமும் தானமாக கோயிலுக்கு பொதுவில் எழுதி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ரங்கனின் வீட்டிற்கு வந்த அவரது மூத்த மகன் ரமேஷ், தனது தந்தையிடம் கோயிலுக்கு பணம் கொடுத்ததையும் நிலம் எழுதி கொடுத்ததையும் எதிர்த்து கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ரமேஷ் கட்டையால் தந்தையை பலமாகத் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த ரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி காவல் துறையினர், ரங்கனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரங்கனின் மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ரங்கனின் மூத்த மகன் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரோகிணி ஆட்சியராக இருந்தபோது எல்லாம் சரியாக நடந்தது - திமுக எம்பி