சேலம் மாவட்டம் ஆர்.கே. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. 80 வயதான இவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் உள்ளது. ராமசாமிக்கு ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்துவைத்த ராமசாமி, தனது மகன், மருகளுடன் வசித்துவந்துள்ளார்.
இதனால், ராமசாமிக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அவரது மகனான அரசுப் பேருந்து ஓட்டுநர் பச்சமுத்து அனுபவித்துவருகிறார் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பச்சமுத்துவின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று பல மாதங்களாக தந்தை ராமசாமியிடம் கேட்டு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், தனது மகன் பெயரில் சொத்துகளை எழுத ராமசாமிக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து பச்சமுத்துவும் அவரது மனைவியுமான ஜெயச்சித்ராவும் இணைந்து, ராமசாமிக்கு உணவு அளிக்காமல், கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்துள்ளனர்.
வீட்டிலிருந்து வெளியே வந்த முதியவர் ராமசாமி, தங்க இடமின்றி சாலை வீதியோரங்கள், அரசு அலுவலக வாயில்களில் படுத்துறங்கி, காலத்தை தள்ளிவந்துள்ளார்.
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தும் தங்க இடமின்றி, உணவின்றி, ஆனாதையாக கைவிடப்பட்ட முதியவர், சாலையோரம் கிடந்த அவல நிலையை அறிந்த ‘போதி மரம் முதியோர் இல்லம்’ நிர்வாகிகள் மீட்டுள்ளனர்.
பெற்ற தந்தையை இழந்து, தந்தையின் ஆலோசனையும் அறவனைப்பும் அன்பும் இன்றி தவித்துக்கொண்டிருக்கும் மகன்களுக்கிடையே, சொத்துக்காக தந்தையை கொடுமைப்படுத்தி, வீட்டைவிட்டு அடித்து துரத்தியது காண்போரை வேதனையடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டியை கழிவறையில் அடைத்து கொடுமை - வளர்ப்பு மகன், மருமகள் கைது