சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் போராளி பியூஷ் மானுஷ். சேலம் சுற்றுப்புறப் பகுதிகளில் கனிம வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க மால்கோ, ஜிண்டால் ஆகிய பெருநிறுவனங்களை எதிர்த்து போராடி வெற்றியும் கண்டுள்ளார். இவர், சேலம் மக்கள் குழு என்ற பெயரில் ஏரிகளை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில், காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி கேள்வி எழுப்ப சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு பியூஷ் மானுஷ் சென்றிருந்தார்.
அவர் தனக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல் வருவதாகவும், மத்திய அரசின் செயல்பாடு பற்றி அக்கட்சியினரிடையே கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முற்றிய நிலையில் பாஜகவினர், பியூஷ் மானுஷை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பியூஷ் மானுஷ் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பியூஷ் மானுஷ் பாஜகவினரால் தாக்கப்பட்ட நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் நேரில் சந்தித்து பியூஷுக்கு ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் பேச்சுரிமை உள்ளது என்றும் இந்த சூழலில் அவர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய பியூஷ் மானுஷ், அனுமதி கேட்டு அங்கு விவாதத்திற்கு சென்ற நிலையில், பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்டேன் என்றார். ஆனால் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் உள்ளது என்றும் கூறினார்.
அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடராமல் கேள்வி கேட்க சென்ற தன் மீது தற்போது பிணையில் வெளிவரமுடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இந்த விவகாரத்தில் முறையாக நீதிமன்றத்தை நாடுவேன் எனவும் தெரிவித்தார்.