பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனையடுத்து தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வருகின்ற திங்கள்கிழமை (ஜூன் 3) இது தொடர்பான விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, 'எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டு வந்ததில் முறைகேடு அதிகம் நடந்துள்ளதாக நீதமன்றமே தெரிவித்துள்ளது. காவல்துறையினர் விவசாயிகளிடம் நடந்துகொண்ட விதத்தை வன்மையாக கண்டித்தது. இதனைத் தொடர்ந்தும் எடப்பாடி பழனிசாமி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தலில் சந்தித்த தோல்விக்கு பின்பும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை.
அவருடைய சொந்த தொகுதியைக்கூட காப்பாற்ற முடியவில்லை. மேல் முறையீட்டில் கண்டிப்பாக மக்களுக்குதான் வெற்றி கிடைக்கும். நியாயம் மக்கள் பக்கம் இருக்கிறது. அரசியல்வாதிகள் அனைவரும் அண்டா குண்டாவ காப்பாத்த ரெடியா இருங்க' என்றார்.