சேலம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் குட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - பாப்பாத்தி தம்பதி. இவர்களது மகள் பிரியாவுக்கும் சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டுதெரு பகுதியைச் சேர்ந்த சேலம் மாநகராட்சியின் பணிபுரியும் ஓட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) பழனிசாமி தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு ஆம்னி வேனில் சென்று விட்டு, இன்று அதிகாலை மகள் பிரியா மற்றும் பேத்தி சஞ்சனா ஆகியோருடன் பெருந்துறை திரும்பிக்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்ற போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த கோரவிபத்தில் பழனிசாமி(52), பாப்பாத்தி(47), ஆறுமுகம்(50), மஞ்சுளா(42), செல்வராஜ்(55), சஞ்சனா(1) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் ஓட்டுநர் விக்னேஷ்(20), மற்றும் பிரியா(25) ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 6 பேரின் உடலை சங்ககிரி அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி ராஜா, வட்டாட்சியர் அறுவடை நம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த ஈச்சர் லாரியை ஓட்டுநர் எடுத்துச் சென்றுவிட்டார். அதனால், சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடி வருகின்றனர்.
இதனிடையே, சாலோரத்தில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்து காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: தாய்லாந்து - சென்னை.. கடத்திவரப்பட்ட 14 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள்.. விமான நிலையத்தில் பறிமுதல்..