அரசாணை 62, ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் சேலத்தில் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் மாவட்ட சிஐடியூ செயலாளர் தியாகராஜன் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற சுகாதாரத் துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
டேங்க் ஆப்பரேட்டர்கள் மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பதற்கு மட்டுமே பணி அமர்த்தப்பட்டவர்கள். ஆனால் அவர்களை மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும், வாரம் முழுவதும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 510 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனால் இந்த அரசாணையை தற்போதைய உள்ளாட்சித் துறை அலுவலர்கள் நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். உலகம் முழுவதும் கரோனோ வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் முறையான உபகரணங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.
பாதுகாக்கப்பட்ட குடிநீர், முக கவசம், கையுறை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அரசு அலட்சியம் காட்டாமல் உடனே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி நடத்தவில்லை - முதலமைச்சர் விளக்கம்